நாடு பிடிக்க வந்தவர்களும் மதத்தைப் பரப்ப வந்தவர்களும் பரப்பிவிட்ட பெரிய புரளி—தமிழ் கலாசாரம் வேறு, வடக்கத்திய கலாசாரம் வேறு என்ற புரளிதான். ஆனால் நாடு முழுதும் ஒரே கலாசாரம், ஒரே மதம் என்பதற்கு நூற்றுக் கணக்கான சான்றுகள்
2000 ஆண்டுகளுக்கு முன்னெழுதப்பட்ட தமிழ் நூல்களில் பளிச்செனத் தெரிகின்றன.
சங்க இலக்கியத்தின்
27,000 வரிகளைப் படித்தவர்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் இல்லாத தமிழ் நூல் இல்லை, இந்து மதக் கடவுள் பெயர் இல்லாத தமிழ் நூல் இல்லவே இல்லை என்பது சட்டென விளங்கும். தொல்காப்பியர் முதல் திருவள்ளுவர் வரை எல்லோரும் இப்படி இந்து மதக் கருத்துக்களை விளக்கியுள்ளனர்.
தமிழ் நூல்களில் மிகப் பழையது தொல்காப்பியம். கி.மு. முதல் நூற்றாண்டு அல்லது அதற்குப் பின்னர் எழுந்தது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். எனது கருத்தை காரண காரியங்களுடன் ‘தொல்காப்பியர் காலம் தவறு’ என்ற 5 பகுதிக் கட்டுரையில் எழுதியுள்ளேன். வேதத்தில் கூறப்பட்ட நாலு கடவுளர்களை தொல்காப்பியர் தமிழர் கடவுளாகக் காட்டியுள்ளார். அவரது தொல்காப்பியமே நான்கு வேதங்களையும் கரைத்துக் குடித்த மஹா மேதையான அதங்கோட்டு ஆசார்யர் முன்னிலையில் அரங்கேறியது என்று பனம்பாரனார் பகருவார்.
மாயோன் (மஹா விஷ்ணு), சேயோன் (சிவப்பு நிற கந்தன்= அக்னி தேவனின் இன்னொரு அம்சம்), வேந்தன் (இந்திரன்), வருணன் ஆகிய நால்வரும் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நிலங்களுக்குரிய தெய்வம் என்று பொருளதிகாரத்தில் தெளிவாகக் கூறிவிட்டார்.
தொல்காப்பியர் மஹா அறிஞர். இந்திரன் என்பது அரசன் என்ற பொதுப் பெயராகும். அந்தப் பதவியில் அமருவோருக்கு அந்தப் பெயர். வெளி நாட்டு ‘அறிஞர்கள்’, இந்திரன் என்று ஏதோ ஒருவர் இருந்தது போல ஆங்கிலத்தில் எழுதிவிட்டனர். இந்திரன் ஒரு பாரதீயன் என்பதற்கு இன்னும் ஒரு சான்று அவனது யானை வாகனமாகும். யானை ஐரோப்பாவிலோ மத்திய ஆசியாவிலோ கிடையாது. ஆக இந்திர வழிபாட்டுக்காரர்கள் வெளி நாட்டினர் எனபதும் புரளி என்பது புரிகிறது.
இந்திரனை தீம் புனல் (இனிப்பான நீர்) உலகத்துக்கு, அதாவது வயலும் வயல் சார்ந்த இடத்துக்கும் அதிபதி என்கிறார் தொல்காப்பியர். இதே கருத்துதான் வேதத்திலும் புராணத்திலும் உள்ளது. இந்திரன் தான் விருத்திரனைக் கொன்று தண்ணீரை விடுவிக்கிறான். மழைக்கு முன்னும் பின்னும் தோன்றும் வானவில்லுக்கும் கூட இந்திரவில் என்றுதான் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பெயர்.
இந்திரனுடைய உலகத்தில் கிடைக்கும் அமிர்தம் (சம்ஸ்க்ருத சொல்) சங்க இலக்கியத்தில் முப்பதுக்கும் மேலான இடங்களில் பயன் படுத்தப்படுகிறது. கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதி பாடிய புறம்
182-ல் இந்திரனுடைய அமிர்தமே கிடைத்தாலும் தனியாக உண்பவர் இல்லை என்கிறார். இதே கருத்து பகவத் கீதையில் இருப்பதை புறநானூற்றில் பகவத் கீதை
(3-13) என்ற கட்டுரையில் ஏற்கனவே கொடுத்துவிட்டேன்.
புறம்
241-ல் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடலில் ஆய் அண்டிரனை வரவேற்க இந்திரன் காத்திருந்ததாகப் பாடுகிறார். போரில் இறந்தால் வீர சுவர்க்கம் கிடைக்கும் என்ற இந்தக் கருத்து பகவத் கீதையில் இருப்பதை எழுதி இருக்கிறேன். ஆய் அண்டிரன் எனபதே அஜேந்திரன் என்ற பெயரோ என்று எனக்கு ஒரு ஐயப்பாடு உண்டு. இந்திரன், அண்டிரன், ஆண்ட்ரூ ஆகியன ஒரே மூலம் கொண்ட சொல்.
அருமையான இந்திரன் ஓவியம்
தமிழ்நாட்டில் இந்திரன் கதைகள், அமிர்தம் ஆகியன எவ்வளவு பிரசித்தம் என்பதை மேற்கூறிய விஷயங்கள் விளக்குகின்றன. இதைவிட வியப்பான விஷயம்
2000 ஆண்டுக்கு முன் திருப்பரங்குன்றத்தில் இருந்த ஓவியமாகும். பரிபாடல்-19 இதை அருமையாகச் சித்தரிக்கிறது. கூட்டம் கூட்டமாக அந்த ஓவியத்தைப் பார்ப்போர் ‘இதோ பார் பூனை வடிவில் இந்திரன்’, ‘அதோ பார் அகல்யை’, ‘இதோ கவுதம மகரிஷி’ என்றெல்லாம் பேசிக்கொள்வதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் பரிபாடல் கவிஞர். இந்து மதக் கதைகள் அவ்வளவு பிரபலம்!
வள்ளுவன் கிண்டல்
வள்ளுவனும் இந்திரனை விடவில்லை. ‘இந்திரனே சாலும் கரி’ என்று அஹல்யை கதையை உதாரணமாகக் கூறி (குறள் 25)
புலன் அடக்கம் இல்லாத இந்திரனுக்கு நேர்ந்த கதியை எடுத்துக் காட்டுகிறார்.
இந்திரனுடைய தேவலோகம் பற்றி நிறைய குறிப்புகள் வருகின்றன. இந்திரனுடைய எல்லா அம்சங்களும் பரிபாடல், திருமுருகாற்றுபடையில் காணக்கிடக்கின்றன.
கரிகாலன் காலத்தில் கொண்டாடப்பட்ட மாபெரும் இந்திர விழாவை நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் அழகாகச் சித்தரிக்கிறது. இது பற்றி எனது இந்திர விழா கட்டுரையில் காண்க.
காஷ்மீர் முதல் கண்டி வரை இன்றும் தமிழர்கள் இந்திரன் பெயரைச் சூடுகின்றனர். ராஜேந்திரன், மஹேந்திரன், பாலேந்திரன், கஜேந்திரன், விஜயேந்திரன் என்ற பெயர்கள் குடும்பத்துக்குக் குடும்பம் காணப்படுகிறது.
அருந்ததி கதை, முப்புர தகனம், மகிஷாசுரவதம், சிவ பெருமான் விஷம் உண்டது முதலிய கதைகள் பழந்தமிழருக்கு அத்துபடி! சம்ஸ்கிருத சொல் இல்லாத சங்க இலக்கிய நூலோ, இந்து மதக் கதை, குறிப்பு இல்லாத சங்க நூலோ கிடையாது என்பது
27,000 வரிகளையும் படித்தவருக்கு தெள்ளிதின் விளங்கும். கடுரையாளர் (லண்டன் சாமிநாதன்) சங்கத் தமிழ் இலக்கியத்தைப் பன்முறை படித்து ரசித்தவர்.
நன்றி - தமிழ் & வேதாஸ், இணையதளம்
குறிப்பு : (இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள்: இந்தக் கட்டுரையை வேறு இடத்தில் பயன்படுத்துவதானால் ‘பிளாக்’-கின் பெயரையோ கட்டுரையாளர் (லண்டன் சுவாமிநாதன்) பெயரையோ வெளியிடுங்கள். பெயர் இல்லாமல் தங்கள் கட்டுரை போல வெளியிடுவது--தமிழுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் செய்யும் துரோகம் ஆகும்)
No comments:
Post a Comment