Tuesday, 5 December 2023

AMAANAVAN (அமானவன்)

''அமானவன்''
------------
 'அமானவன்'...இப்படி ஒரு பெயர் கேள்விப்பட்டதில்லையே...! இது கடவுளின் பெயரா... இல்லை ஏதாவது புராணப் பாத்திரமா...!

இவனை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதுவும் இறப்புக்கு பின்னரே பார்க்க முடியும். இவனது இருப்பிடம் வைகுண்டம்.

அங்கு பெருமாளின் இருப்பிடத்திற்கு முன்னால் துவார பாலகர்கள் இருப்பார்கள்.

 பெருமாள் கோயிலில் ஜெயன், விஜயன் என்ற பெயரில் சிலை வடிவாக பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு சற்று முன்னால் அமானவன் நின்றிருப்பான்.

சரி...இவனுக்கு அங்கு என்ன வேலை!

நீங்கள் தினமும் காலையில் எழும்போதே சுவாமி படத்தின் முன் விழித்திருக்கலாம்.

'ஹரி.. ஹரி..., நாராயணா... கோவிந்தா...பத்மநாபா' என்றெல்லாம் பெருமாளின் பெயர்களைச் சொல்லியபடியே எழலாம். 

எந்நேரமும் பிறரது நலம் பற்றி சிந்தித்திருக்கலாம். 

என்ன கஷ்டம்
வந்தாலும், “பெருமாளே! எனக்கு எல்லாம் நீயே.. இந்தக் கஷ்டத்தையும் நீ தந்த பரிசாக ஏற்கிறேன்'' பாசிட்டிவ்' ஆக நினைக்கலாம். புரட்டாசி சனி விரதம் இருந்திருக்கலாம்.

இப்படிப்பட்ட நல்லவர்கள் இறந்த பிறகு, வைகுண்ட வாசலுக்கு செல்வார்கள். 

அங்கே அமானவன் காத்திருப்பான். 

அவர்களைக் கண்டதும், கையைப் பிடித்து அழைத்துச் செல்வான். 

இவனுடன் வருவோரை துவார பாலகர்கள் தடுக்க மாட்டார்கள். 

பெருமாள் முன் நிறுத்தி மகாலட்சுமி தாயாரோடு பெருமாளைத் தரிசிக்க செய்வான்.

இவனுக்கு ஏன் அமானவன் என பெயர் வந்தது?

'மானவன்' என்றால் 'மனிதன்'. 'அமானவன்' என்றால் மனிதன் அல்லாதவன். அதாவது தேவபுருஷன். புண்ணியம் செய்தவர்களை பெருமாளிடம் அழைத்துச் செல்வது இவனது புண்ணிய பணி.

'அமானவன் கரத்தாலே தீண்டல் கடன்' என்கிறார் வைணவ ஆச்சாரியார் மணவாள மாமுனிகள்.

அதாவது, 'அமானவன் என்னை கைப்பிடித்து பெருமாளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்' என்கிறார்.

நம் கைகளையும் அமானவன் பிடிக்க இன்றே நல்லதை செய்யத் தொடங்குவோம்...

கோவிந்தா ஹரி கோவிந்தா !

No comments:

Post a Comment